கோட் சூட்டில் முதல்வர்... சிங்கப்பூர் தொழில் அதிபர்களோடு இணைந்து கெத்து காட்டும் ஸ்டாலின்

First Published May 24, 2023, 8:48 AM IST

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோர் வரவேற்றனர். 
 

இதனையடுத்து இன்று காலை தொழில் முதலீட்டாளர்களோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன் அவர்களையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைவர்களை சந்தித்து  தமிழகத்தில் உள்ள கட்டமைப்பு வசதி, தொழில் முதலீட்டாளர்களுக்கு சலுகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பிற்கு பின் இன்று மாலை தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTDசிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு SIPO மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கூட்டங்களுக்கு பிறகு சிங்கப்பூர் தமிழ் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். 

இந்த பயணங்களை முடித்துக்கொண்ட பின்னர் ஜப்பான் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். மேலும் ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

click me!