தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய திட்டம்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடு இல்லாத மக்களுக்கு குறைந்த விலையில் வீடு மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரண்டு அறை கொண்ட வீடுகளை குறைந்தபட்சம் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வரும் நிலையில், வீட்டு வசதி வாரியம் குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்து வருகிறது.
இதே போல தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்டும் வருகிறது. அந்த வகையில் வீட்டு வசதி வாரியத்திற்குபட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு தமிழக அரசு தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணத்தை செலுத்தாக வீட்டு மனை ஒதுக்கீடுதாரர்கள்
அதன் படி, சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணாநகர் கோட்டத்திற்குட்பட்ட அண்ணாநகர், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், வில்லிவாக்கம், மணலி பகுதி I (ம) II, கொடுங்கையூர், கொரட்டூர்,எம்.கே.பி.நகர், மாதவரம் மற்றும் ஆகிய திட்டப்பகுதிகளில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய ஒதுக்கீடு விதிகளின்படி பணம் திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும், நீண்டகாலமாக பலர் நிலுவை தொகையை செலுத்த முன்வரவில்லை.
மறு விற்பனை செய்ய முடிவு
ஆகையால் ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை. தொகை செலுத்தியதற்கான இரசீதுகள் மற்றும் ஒதுக்கீடு தொடர்புடைய அசல் ஆவணங்களுடன் அண்ணாநகர் கோட்ட அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி, வாரிய விதிமுறைகளின்படி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவறும்பட்சத்தில் நிலுவை வைத்துள்ள அனைத்து ஒதுக்கீடுதாரர்களின் ஒதுக்கீடு உத்தரவு இரத்து செய்யப்பட்டு, மறுவிற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.