செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்லவும் காத்திருந்தனர். அப்போது அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையை கடக்க முயன்ற மூன்று இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 6 பேரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 6 பேரில் 2 பேர் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் கார்த்திக் (23), முதலாமாண்டு மாணவர் ஜஸ்வந்த் (20) இருவரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.