தமிழக அரசு சமர்ப்பித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழக அரசு சமர்ப்பித்த இந்தத் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, மக்கள் தொகை குறைவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
23
திருப்பி அனுப்பப்பட்ட திட்ட அறிக்கை
20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர மத்திய அரசு விதிமுறை வகுத்துள்ளது.
கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரப் பகுதிகளிலும் தற்போதைய மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த மக்கள் தொகை அளவை அடிப்படையாகக் கொண்டே திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
33
நிராகரிப்புக் காரணமான மக்கள்தொகை!
தமிழகத்தின் வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களாக கோவை மற்றும் மதுரை திகழும் நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மெட்ரோ திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தத் திட்டமிட்டது.
இந்த நிலையில், மக்கள்தொகையைக் காரணம் காட்டி மத்திய அரசு திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியிருப்பது, இந்த இரண்டு முக்கிய நகரங்களிலும் மெட்ரோ திட்டப் பணிகளைத் தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.