அரசியலில் விஜய்
தமிழ் திரைத்துறையில் நம்பர் 1 நடிகராக இருப்பவர் நடிகர் விஜய், ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இந்தநிலையில் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்த விஜய், அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை முறியடித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கியுள்ளார் விஜய், திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் கால் பதித்துள்ளார் விஜய்,
TVK
முதல் அரசியல் மாநாடு
கடந்த ஜனவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்தவர், அடுத்ததாக கட்சியின் பாடல் மற்றும் கொடியை வெளியிட்டு அசத்தினார். இதனையடுத்து தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதியையும் அறிவித்தார். அந்த வகையில் செப்டம்பர் மாதம் மாநாடு நடத்த திட்டமிட்ட நிலையில், குறைவான காலம் இருந்ததால் அக்டோபர் மாதத்திற்கு மாநாடு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காக கடந்த ஒரு மாதமாக புயல் வேகத்தில் பணிகள் நடைபெற்றது. பிரம்மாண்ட மேடை, கொடிகள். இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
TVK Maanadu vikravandi
விபத்தில் சிக்கிய ரசிகர்கள்
இன்று நடைபெறும் மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை, திட்டங்கள், எதிர்கால இலக்கு போன்றவற்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிய தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் விபத்தில் சிக்கிய விஜய் ரசிகர்கள் உயிரிழ்ந்ததாக தகவல் வெளியானது. ரயிலில் இருந்து குதித்த விஜய் ரசிகர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் விஜய் அரசியல் மாநாடு தொடர்பாக பாஜக இளைஞர் அணி நிர்வாகி வினோஜ் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில்,
vinoj selvam
ரீல் இல்லை.. இது ரியல்
முழுவதும் பக்குவமற்ற ரசிகர்களை வைத்துக் கொண்டு அரசியல் கட்சி என்ற மாபெரும் வேள்வியை நடிகர் விஜய் தொடங்கியிருக்கிறார். ரசிகர்கள் சிலர் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ரீல்ஸ்களை பார்க்க முடிந்தது. த.வெ.க. மாநாட்டிற்கு புறப்பட்ட ரசிகர்கள் பலர் சென்னை உள்பட பல இடங்களில் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர். விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து பயணித்த ரசிகர், விக்கிரவாண்டி அருகே ரயில் செல்லும் போது நேராக ரயிலில் இருந்து குதித்து மாநாட்டிற்கு செல்ல நினைத்து உயிரை இழந்துள்ளார்.
இழப்பீடு வழங்கிடுக
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை நடிகர் விஜய் வழங்க வேண்டும். விஜய்யும், அவருடைய ரசிகர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான். இது ரீல் அல்ல, ரியல் என தெரிவித்துள்ளார்.