
இந்தியாவில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் செல்போன் பயன்பாட்டால் 7,558 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 3,395 பேர்தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 15.7% அதிகம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், 2022 இல் செல்போன் பயன்பாட்டால் 39 சாலை விபத்துகள் ஏற்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். நல்லவேளையாக சென்னையில் செல்போன் பயன்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக, மொபைல் ஸ்டாண்டில் கைபேசியை வைத்து லொகேஷன் (Location) பார்ப்பதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால், பைக் டாக்ஸி ஓட்டுநர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் இந்த வசதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வாகனம் ஓட்டும்போது வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. இவர்களைக் கண்காணிப்பதற்கோ அல்லது அபராதம் விதிப்பதற்கோ தற்போது சட்டத்தில் தெளிவான இடம் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மொபைல் ஸ்டாண்டில் கைபேசியை வைத்து வீடியோ பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. போலீஸ்காரர்களைப் பார்த்தவுடன் உடனடியாக வீடியோவை மாற்றிவிட்டு லொகேஷனை ஆன் செய்துவிடுகின்றனர். அவர்கள் எப்போதும் வீடியோதான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதை நிரூபிப்பதற்கு எங்களிடம் போதிய நிபுணத்துவம் இல்லாததால், அவர்களுக்கு அபராதம் விதிப்பது சிரமமாக உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலும் விபத்துக்குக் கைபேசிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதனை வாகன ஓட்டிகள் ஏற்பதில்லை. விபத்து ஏற்பட்டதும் இன்சூரன்ஸ் மூலமாக தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். மேலும், தங்கள் மீதான தவறை ஒப்புக்கொள்ளவும் மறுக்கின்றனர்.
வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பார்ப்பது பலருக்கும் தற்போது வாடிக்கையாகிவிட்டது. இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், லாரிகள் என அனைத்து வாகன ஓட்டிகளும் செல்போன் பார்த்துக் கொண்டே இப்போது வாகனம் ஓட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக நடுத்தர வயது கொண்டவர்கள் தான் இது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் வாகனத்தில் பயணிப்பவர்களை மட்டுமின்றி, சாலையோரத்தில் நடந்து செல்பவர்களையும் அவர்கள் ஆபத்தில் தள்ளுகின்றனர். கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது, பலர் உயிரிழக்க நேரிடுகிறது என ஓட்டுநர் ஒருவர் நம்மிடம் வருத்தத்துடன் கூறினார்.
டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் கிரிக்கெட், டிவி சீரியல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை பார்ப்பதாகவும் போக்குவரத்து போலீசார் ஒருவர் வேதனை தெரிவித்தார். போக்குவரத்து நிபுணர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், சுமார் 20% வாகன ஓட்டிகள் பெரும்பாலும் வாகனம் ஓட்டும்போது அலைபேசி பயன்படுத்துகின்றனர். வாகனம் ஓட்டும்போது செல்போனில் அழைப்பது, வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று அவர் எச்சரித்தார்.
கைபேசி பயன்பாட்டுக்கு என்று ஒரு வரையறை உள்ளது. பொதுவாக கைபேசி என்பது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் சாதனம் தானே தவிர, பிறரது உயிருக்கு உலைவைப்பது அல்ல. ஆகையால், வாகன ஓட்டிகள் இனியாவது வாகனம் ஓட்டும்போது தங்களை நம்பி வந்தவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாப்பான பயணம் உங்கள் கைகளில்!