சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 3ம் தேதி நடைபெறுவதையொட்டி, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீநடராஜர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன விழாக்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
24
ஆருத்ரா தரிசன விழா
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், நேற்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
34
உள்ளூர் விடுமுறை
விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 14 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அரையாண்டு விடுமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.