Toll plazas in Tamil Nadu : தமிழகத்தில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி சாலையை பராமரிக்கும் கட்டணமாக சுங்க கட்டணமானது அந்த பகுதியில் செல்லும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும். இதன் படி ஒரு லோட் கேட்டிற்கு 40 ரூபாயில் இருந்த சுங்க கட்டணம் 70 ரூபாய் வரை அதிகரிதந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்வதற்குள் குறைந்த பட்சம் 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை சுங்க கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.
சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் உயர்வு
இந்த நிலையில் தான் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
இதனையடுத்து மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபடவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சுங்க கட்டணம் வெளிப்படை தன்மை இல்லை
இதற்கு வாரி மற்றும் வாகன ஓட்டுநர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டுக் கட்டணம் மற்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் அறமோ, நியாயமோ அல்ல.
தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி
ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ்நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும், எந்த பயனும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,‘‘நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
புதிய சுங்கக்கட்டணக் கொள்கை
இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
சுங்க கட்டண அறிவிப்பு ஏன்.?
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும்; அதற்கு முன்பாகவே சுங்கக்கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டிய தேவை என்ன? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.