TASMAC scam bjp Protest : தமிழகத்தில் கடந்த வாரம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சார்பாக சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் இந்த சோதனையின்போது போக்குவரத்து டெண்டர், பார் உரிமம் டெண்டர், பணியிடமாற்றம், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமான ஆர்டர்கள், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 அதிகமாக வசூலித்தது போன்ற குற்றங்களுக்கான ஆதாரங்களும் கிடைத்ததாக கூறப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனை
மேலும் மதுபான நிறுவனங்களான SNJ, Kals, Accord, SAIFL, சிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான நிறுவனங்கள் பெரிய அளவிலான நிதி மோசடிகள், கணக்கில் காட்டப்படாத பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சோதனையில் தெரியவந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்திருந்தது. இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடிகள் நடைபெற்று இருப்பதாகவும அமலாத்துறை அறிக்கையில் கூறப்பட்டது. இதனையடுத்து அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டது.
பாஜக முற்றுகை போராட்டம்- தலைவர்கள் கைது
தமிழக பாஜகவும் போராட்டம் நடத்த இருப்பதாகவும், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை போராட்டம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை வீட்டுக்காவலில் போலீசார் சிறை வைத்தனர். மேலும் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாஜகவினரை கைது செய்ய வாகனங்களோடு காத்திருக்கின்றனர்.
தொடை நடுங்கி திமுக அரசு
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜக மூத்த தலைவர்களில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
அண்ணாமலை சவால்
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.