Chennai double murder : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் இரட்டை கொலை நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண்(25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து தூங்கியுள்ளனர்.
மது போதையில் தூங்கிய ரவுடிகள்- வெட்டிக்கொலை
இரவு 10 மணியளவில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று படுத்திருந்த அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளது. மது போதையில் இருந்ததால் தப்பிக்க முடியாமல் அலறி துடித்துள்ளனர்.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் உடல் முழுவதும் வெட்டு காயத்தோடு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பழிக்கு பழியாக கொலையா.?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு இருந்த நிலையில் இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அருண் மற்றும் படப்பை சுரேஷ்யை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கொலைக்கு காரணம் என்ன.?
அதே நேரத்தில் அருண் மற்றும் அவரது அண்ணன் அர்ஜூன் ஆகியோரை கொலை செய்ய அந்த கும்பல் வந்த நிலையில் அங்கு அர்ஜூன் இல்லாத நிலையில் படப்பை சுரேஷ்சை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது .
சுக்கு காபி சுரேஷ்
இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக கோட்டூர்புரம் போலீசார் தேடி வருகின்றனர். கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.