Sengottaiyan and Annamalai CM candidates : தமிழகத்தில் அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக பல குழப்பங்கள், மோதல்கள் நீடிக்கிறது. இதனால் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 8 ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை சுமார் 10 தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. தொண்டர்களும் விரக்தியில் உள்ளனர்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
இந்த நிலையில் அடுத்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுகவில் பணியாற்றியவர் செங்கோட்டையன், 1989 ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 எம்எல்ஏ க்களில் 7 பேருடன் ஜெயலலிதாவிடம் வந்தவர் தான் செங்கோட்டையன்.
சசிகலா சிறைக்கும் செல்லும் நேரத்தில் முதலமைச்சர் பொறுப்பை செங்கோட்டையனிடம் கொடுக்கத்தான் திட்டமிட்டமாக கூறப்படுகிறது. ஆனால் இதனை செங்கோட்டையன் மறுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பொறுப்பு சென்றது.
மீண்டும் உடையும் அபாயத்தில் அதிமுக
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும்- செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அதிமுக மீண்டும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்! அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையினை முன்னிறுத்த பாஜக முடிவு.
3 வருடம் செங்கோட்டையன் முதல்வர்
தமிழகத்தின் சீனியர் அரசியல் தலைவரான செங்கோட்டையனை, முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், அவருக்காக பிரசாரம் செய்யவும் அண்ணாமலை சம்மதம். அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் என ஒரு பிரமாண்டமான அணியை அமைத்து, திமுக கூட்டணியை வீழ்த்த டெல்லி வியூகம். இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் மூன்று வருட காலத்திற்கு செங்கோட்டையன் முதல்வராக இருப்பார். .
முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை
2029-ல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமலுக்கு வருமானால், அந்தத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை முன் நிறுத்தப்படுவார். இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன! என தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு அதிமுகவின் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து அவரது பதிவிற்கு பதிலிட்டு வருகிறார்கள். அதிமுக தலைவர்கள் யாரும் விலை போகமாட்டர்கள் அதற்கான தேவையும் இல்லையன பதிவிட்டுள்ளனர்.