Dmk and Admk alliance : தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் சரியாக ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே ஏற்கனவே ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை புதிதாக நியமித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதே போல திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதே கூட்டணியில் தொடர திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தற்போது எந்த கட்சி உள்ளது.? எந்த எந்த கட்சிகள் புதிதாக இணையும் என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
அதிமுக- திமுக- பாஜக கூட்டணி
கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களும் தோல்வியை தழுவியது. இதே போல பாஜக தலைமையில் பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி போட்டியிட்டது. இந்த கட்சிகளும் அனைத்து இடங்களிலும் தோல்வியே கிடைத்தது. இதனால் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் திமுகவிற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி திட்டம்
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெகவை தங்கள் அணிக்கு இழுக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் தவெக தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் தலைமையில் தான் கூட்டணி எனவும் 40 சீட்டுக்காக யாரிடமும் நிற்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்து விட்டது.
இதனால் தங்கள் அணிக்கு பாஜகவை இழுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கை விரித்தது தேமுதிகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.
தனி கணக்கு போடும் பிரேமலதா
எனவே வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடிக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக தமிழக அரசின் பட்ஜெட்டை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில் பிரேமலதா வரவேற்றுள்ளார். மேலும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசோடு கை கோர்க்க தயார் எனவும் அறிவித்துள்ளார்.
எனவே அதிமுக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு பல்டி அடிக்கவே இந்த சிக்னல் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். இதனால் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி என்ற எடப்பாடி பழனிசாமியின் கனவு ஒவ்வொன்றாக தகர்ந்து வருவதாகவே கூறப்படுகிறது.