பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்கியதற்கு பதிலடியாக, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மயிலம், மேட்டூர், மற்றும் தருமபுரி எம்எல்ஏக்கள் என மூன்று பேரை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதலை அடுத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் பாமகவை சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்துள்ளது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் ராமதாஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
24
அன்புமணி அணி
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி அணியானது அதிமுக- பாஜக தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் ராமதாஸ் தரப்பு திமுக, தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ள ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.
34
ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மயிலம் எம்எல்ஏ சசிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ எஸ்.சதாசிவம், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.