மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 4 மற்றும் 5 தேதிகளில் தமிழகம் வருகிறார். இந்த பயணத்தில், புதுக்கோட்டை பொதுக்கூட்டம், ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் மற்றும் 2026 தேர்தல் குறித்த பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆன்மிகம், அரசியல் மற்றும் கலாச்சாரம் என முப்பரிமாணங்களைக் கொண்ட இந்தப் பயணம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா வரும் ஜனவரி 4-ஆம் தேதி அந்தமானில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாகத் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறவுள்ள பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். தமிழகத்தில் பாஜகவின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
24
ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்
ஜனவரி 4 இரவு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் அமித் ஷா, அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
ஜனவரி 5 காலை வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
தரிசனத்தை முடித்த கையோடு, காலை 11 மணியளவில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் 2026 தேர்தலுக்கான வியூகங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
34
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு
அமித் ஷாவின் இந்தப் பயணத்தில் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது 'தொகுதிப் பங்கீடு'. 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக நீடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த முதற்கட்ட ஆலோசனைகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.
குறிப்பாக, பாஜக சில குறிப்பிட்ட தொகுதிகளைக் கேட்டு வருவதால், அது தொடர்பான இழுபறிகளுக்கு இந்தப் பயணத்தில் தீர்வு காணப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் நடைபெறவுள்ள ஒரு கலாச்சார விழாவிலும் அமித் ஷா பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக திருச்சி மண்ணார்புரத்தில் உள்ள இராணுவப் பயிற்சி மைதானம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், பாதுகாப்பு காரணங்களால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.