ADMK BJP alliance : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே பணியை தொடங்கிவிட்டது. 200 தொகுதி இலக்கு என நிர்ணயித்து கிளைக்கழகம் முதல் மாவட்டம் வரை தேர்தல் பணிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் திமுக கூட்டணியில் கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிமுகவின் கூட்டணி வியூகம்
இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் எதிர் அணியில் உள்ள அதிமுக, திமுகவை வீழ்த்த மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு ஏற்றார் போல நடிகர் விஜய் தொடங்கிய தவெகவை தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென அறிவித்து விட்டது. மேலும் தங்களது செல்வாக்கை நிருபிக்க 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முக்கிய களமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது.
அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு
இந்த நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியே இல்லையென தெரிவித்து வந்த அதிமுக வேறு வழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக கொள்கை வேறு, கூட்டணி வேறு என அறிவித்தது. அரசியல் கட்சிகள் எதுவும் உறுதியான கூட்டணி இல்லையென கூறியது. அடுத்ததாக டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் 2026ஆம் ஆண்டு கூட்டணி அமைப்பது என உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
நிபந்தனை விதித்த எடப்பாடி
மேலும் கூட்டணி தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமையிடம் தான் பேசப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என உறுதியாக எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கும் அதிருப்தியை பதிவு செய்துள்ளதாகதெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது அதிமுக தொடர்பாக எந்தவித சர்ச்சையான கருத்துகளை கூற வேண்டாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலைக்கு அழைப்பு
மேலும் அதிமுக தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார் என தகவல் கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக வேறொருவரை நியமித்து விட்டு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.