அதிமுக எடுத்த அதிரடி முடிவு! ஸ்தம்பிக்கப்போகும் தமிழகம்!

First Published | Dec 26, 2024, 2:21 PM IST

AIADMK Protests: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. 

Anna University

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக வள்ளுவர் கோட்டத்திலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

AIADMK

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதலே, தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. கடந்த 23ம் தேதி அன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ் நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

Tap to resize

Edappadi Palanisamy

திமுக ஆட்சியில், பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதோடு, கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

AIADMK Protest

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழ் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை.

DMK

அதேபோல், இந்த அலங்கோல ஆட்சியில், வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; திமுக-வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் திமுக-வினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியாளர்களால்  மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

DMK Government

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, அதிமுக சார்பில் டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும், நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும். 

EPS

விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!