திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பிரதான சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ்ஐ அதிமுக தொண்டர்கள் தாக்கி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் பிற கட்சிகளுக்கு முன்னதாகவே கூட்டணியை உறுதி செய்து சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
24
துறையூர் பிரதான சாலையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்
அந்த வகையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம் பிரசாரத்தை முடித்துக் கொண்டு துறையூர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அப்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பழிசாமியின் வருகையை முன்னிட்டு துறையூர் பேருந்துநிலையம் அருகே பிரதான சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
34
ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்
இந்நிலையில் ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய நபரை மீட்பதற்காக அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. பழனிசாமி பிரசார இடத்திற்கு வந்து சேராத நிலையில், அதற்கு முன்னதாக அப்பகுதியை கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கூட்டத்திற்காக கூடியிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மத்தியில் வாகனத்தை இயக்கி உள்ளார். அப்போது ஆம்புலன்ஸ்ஐ சூழ்ந்துகொண்ட அதிமுக தொண்டர்கள் வாகனத்தில் நோயாளி இல்லாத காரணத்தால் வாகனம் தொடர்ந்து முன்னோக்கி செல்லாதவாறு தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கர்ப்பிணியாக இருந்த செவிலியர் மீதும் அதிமுக.வினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது கூட்டத்தின் நடுவே அடிக்கடி ஆம்புலன்ஸ் வருகிறது. இனி அப்படி ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸ்ஐ ஓட்டி வரும் ஓட்டுநர் நோயாளியாக்கப்பட்டு அதே ஆம்புலன்ஸ்ல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதனை தற்போது அக்கட்சி தொண்டர்கள் செயல்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.