கல்வி, திருமணம், மருத்துவ செலவுக்கு பணம் தேவையா.? நிதியை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்

First Published | Nov 21, 2024, 7:52 AM IST

தமிழக அரசு  'வேர்கள்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும். மாதம் 100 ரூபாய் சந்தா செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.

தமிழக அரசின் நிதி உதவி திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பார்த்து பார்த்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி, காலை மற்றும் மதிய உணவு திட்டம், சீருடை, காலணி, இலவச பஸ்பாஸ், சைக்கிள் என திட்டங்களை செயல்படுத்துகிறது. இதுவே உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கான திட்டங்கள்

அடுத்ததாக திருமண உதவி திட்டமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக கர்ப்பிணி பெண்களுக்கு தவனை முறையில் 18ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் சுய தொழில் செய்ய மானியத்தில் கடன் உதவியும், உதவி தொகையையும் வழங்கி வருகிறது.

Tap to resize

வேர்கள் திட்டம்

அடுத்ததாக மாதம், மாதம் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்களுக்கு உதவிடும் வகையில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கல்வி, திருமணம், உடல்நலம் பாதிப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் படி, கூட்டுறவு இயக்கத்திற்கு வேர்கள் போன்று ஆதாரமாக இருக்கும் அனைத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் பேணும் வகையில் உறுப்பினர் நலநிதி உருவாக்கப்பட்டு "வேர்கள்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நிதி உதவி திட்டம்- இணைவது எப்படி.?

இந்த திட்டத்தின் கீழ் சங்க உறுப்பினர்கள். குடும்ப உறுப்பினர்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி அளித்து சங்கங்கள் மீது பிணைப்புடன் இருந்து அதன் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் இருக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 

அந்த வகையில் வேர்கள் திட்டத்தில் இணைய அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தனி நபர் உறுப்பினர் ரூபாய் 100 மாத சந்தா செலுத்தி சேரலாம். பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் கைபேசி எண் பதிந்து OTP வாயிலாக உள் நுழைவு செய்து உறுப்பினர் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 
 

வேர்கள் திட்டத்தின் பயன்கள் :

உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ. 50,000

விபத்து மரணம் அடைந்தால் ரூ. 1,00,000 

முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ. 50,000

இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ. 10,000

பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ. 25,000

இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ. 10,000

உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை நிதி பயன் பெறலாம்.
 

எவ்வாறு நிதி உதவி பெறுவது ?

உறுப்பினர், உறுப்பினரின் நியமனதாரர் மரணம், விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக கைபேசி OTP வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RCS Portal வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு மேலனுப்பி பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழுவால் நிதியுதவி வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!