tamil nadu rain
வெளுத்து வாங்கிய மழை
வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு "ஃபெஞ்சல்" புயல் பல மாவட்டங்களில் 50 செ.மீட்டர் வரை மழையை கொட்டியது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது.
பல வீடுகள் தண்ணீரில் முழ்கியுள்ளது. கார்கள், வேன்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் செல்லும் பகுதி முழுவதும் அதி தீவிர மழையை "ஃபெஞ்சல்" புயல் கொட்டி செல்கிறது. அந்த வகையில் இன்றும் நாளையும் அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Cyclone Fengal: Heavy Rains in Puducherry & Cuddalore
காட்டாற்று வெள்ளம்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஃபெஞ்சல்" புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புயல் சின்னத்தின் காரணமாக இன்று (02-12-2024) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,
கன மழை எச்சரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் மழை எச்சரிக்கை
நாளை (03-12-2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.