
சென்னையில் சூப்பர் டூரிஸ்ட் ஸ்பாட்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு இணையாக மக்களும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது ஓய்வு கிடைக்கும் அமைதியான இடங்களை தேடி செல்லலாம், குடும்பத்தோடு வெளியில் செல்லலாம் என காத்திருக்கிறார்கள். அப்படி ரன்னிங் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஓய்வு எடுக்க சென்னையில் பல இடங்கள் உள்ளது.
குறிப்பாக ஆசியாவிலையே மிக நீண்ட கடற்கரையான மெரினா, வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா பிளானிடோரியம், செம்மொழிப்பூங்கா என பல இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு பல முறை சென்ன மக்களுக்கு புதிய அனுபவத்தை தேட வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு பறக்க தொடங்கி விடுகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ளதையும் தாண்டி சென்னையில் புதிய டூரிஸ்ட் ஸ்பாட் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ந்த வகையில், சென்னையின் புதிய அடையாளமாக சிறந்த பொழுதுபோக்கு இடமாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னையில் பல்வேறு இடங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனை மீட்க தமிழக அரசு பல சட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தனியார் அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலம், நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசால் மீட்கப்பட்டது. இதனையடுத்து இந்த நிலமானது கடந்த ஆண்டு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் தமிழக அரசால் தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பொதுமக்கள் சுற்றிப்பார்க்கும் வகையில் சூப்பரான பூங்காவானது அமைக்கப்பட்டுள்ளது.
ஜிப்லைன் வசதியோடு சுற்றிப்பார்க்கலாம்
இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம்,
கட்டணம் எவ்வளவு தெரியுமா.?
23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு - ரூ.100/- சிறியவர்களுக்கு - ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு - ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும்,
நடனமாடும் நீர் ஊற்று
மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://tnhorticulture.in/kcpetickets பெறலாம். விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.