இந்தியாவின் தென்கோடி முனையமான கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் கன்னியாகுமரிக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, அதிக அளவு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.
24
Kanyakumari Glass Bridge budget
கண்ணாடி கூண்டு பாலம்
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்க்கத் தவறுவதில்லை. ஆனால் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளால் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவரும் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.
இதற்கான பணிகள் வேக வேகமாக நடந்த நிலையில், இப்போது விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் கடல் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்றும், நாளையும் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்ள இன்று கன்னியாகுமரி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தையும் திறந்து வைக்கிறார். இந்த கண்ணாடி கூண்டு பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் கண்ணாடி கூண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதிக அளவு மக்கள் நடந்து சென்றாலும் அதை தாங்கும் வகையில் இந்த கண்ணாடிகள் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகமாக இருந்தாலும் அதை தாங்கும் வகையிலும், பலத்த காற்றில் பாதிக்கப்படாத வகையிலும் கண்ணாடி பாலம் வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இனிமேல் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறையில் இருந்து இந்த கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே சென்று விட முடியும். கண்ணாடி பாலம் வழியாக கடல் நடுவே கடல் அன்னையின் அழகை ரசித்தபடி நடந்து செல்வது ஒருவித திகிலையும், பிரமிப்பையும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கும். இந்த பாலத்தை இன்று முதல்வர் திறந்து வைக்கும் நிலையில், முழுமையாக பணிகள் முடிந்தபிறகு பொதுமக்கள் கண்ணாடி பாலத்தின் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.