
கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை தட்டி தூக்கி விடலாம் என்று அதிமுகவினர் வியூகம் வகுத்து வரும் நிலையில் அதை முறியடிக்க செந்தில் பாலாஜி களமிறங்கி இருக்கிறார். அவரது வியூகம் கொங்கு மண்டலத்தில் அனலை கிளப்பி உள்ளது.
‘‘கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வால்பாறை தொகுதி, திருப்பூர் வடக்கு தொகுதி, பவானிசாகர் தொகுதி ஆகியவற்றை திமுக ஒதுக்கியது. ஆனால் இந்த மூன்றிலும் அதிமுகதான் வெற்றி பெற்றது. அதனால் இம்முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் மாற்றிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு இப்போது திருப்பூர் மேயராக இருக்கும் தினேஷ்குமாருக்கு தலைமை சீட்டு ஒதுக்கி ரெடியாக வைத்திருந்தது. தற்போது திருப்பூர் குப்பை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவருக்கு சீட் கொடுத்தால் படுதோல்வியை சந்திக்க நேரிடும். எனவே தினேஷ்குமாருக்கு சீட் கொடுக்க தலைமை விரும்பவில்லை. அதனால் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகர் தொகுதி அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதியாக இருப்பதால் அங்கு திமுக போட்டியிட்டால் தான் சரிக்கு சமமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ள செந்தில் பாலாஜி, அதற்கு ஈடாக டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட்டு ஒதுக்க பரிந்துரை செய்துள்ளார். வால்பாறை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றி பெற வைக்க முடிவு செய்து இருப்பதால் வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டுக்கு கிழக்கு, கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, நீலகிரியில் ஊட்டி ஆகிய தொகுதிகள் கடந்த முறை ஒதுக்கப்பட்டது.
இந்த நான்கு தொகுதிகளில் ஈரோடு கிழக்கிலும், ஊட்டியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கோவை தெற்கில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். கமல்ஹாசன் இரண்டாம் இடமே வந்தார். காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எனவே பாஜகவை வீழ்த்த கோவை தெற்கு இம்முறை திமுக நேரடியாகவே களத்தில் இறங்குகிறது. காங்கிரஸ் சார்பாக செல்வாக்கான மற்றும் செலவு செய்யக்கூடிய வேட்பாளர் இருந்தால் மட்டுமே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகளில் சீப்பு ஒதுக்க முடியும் என்று செந்தில் பாலாஜி முடிவு செய்து இருக்கிறார். உடுமலைப்பேட்டை தொகுதியில் கடந்த முறை முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 22,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை காங்கிரசுக்கு உடுமலைப்பேட்டைக்கு பதிலாக தாராபுரம் தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை ஊட்டி தொகுதியில் பாஜக போட்டியிட்டதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இம்முறை ஊட்டியில் அதிமுக போட்டியிட்டால் காங்கிரசால் எதிர்கொள்ள முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் ஊட்டி எம்.எல்.ஏ கணேஷ் தொகுதி பக்கமே வராமல் மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதால் மீண்டும் ஊட்டி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இளங்கோவன் இறந்ததால் திமுக வசம் சென்ற ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலில் திருச்செங்கோடு சூலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சூலூரில் அதிமுக வெற்றி பெற்றது. திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அதிமுக வேட்பாளர் தங்கமணியை எதிர்த்துப் போட்டியிட ஈஸ்வரனுக்கு குமாரபாளையம் தொகுதி ஒதுக்க முடிவு செய்துள்ளார்.
அதேபோல் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு இன்னொரு சீட்டு ஒதுக்கப்பட்டால் கருப்பணன் எம்எல்ஏவாக இருக்கும் பவானி தொகுதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கலாம் என்றும் திமுக தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர் வேட்பாளராக இருந்தால் ஜோதி மணிக்கு செக் வைக்க வசதியாக இருக்கும் என்றும் அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்கும் நோக்கில் செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து லிஸ்டை கையில் வைத்திருக்கிறார்’’ என்கின்றனர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரத்தினர்.
இதுகுறித்து திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் சிந்து ரவிச்சந்திரன். ‘‘கடந்த ஆட்சியின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் கையில் இருப்பதால் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும். கொங்கு மண்டலத்தில் 39 தொகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பாளராக இருக்கிறார். 39 தொகுதியிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை நினைத்துக் கொண்டு கனவு காண வேண்டாம். இந்த தேர்தலில் அது நடக்காது’’ என்றார்.