திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.