கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் இருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
23
புஸ்ஸி ஆனந்தை தூக்க தீவிரம் காட்டும் போலீஸ்
இந்நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரை கைது செய்யும் பணியில் காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே ஏற்காட்டில் உள்ள மலை கிராமத்தில் ஆனந்த் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக காவல் துறை ஐஜி ஜோஷி நிர்மல் தலைமையிலான காவல் துறையினர் 3 தனிப்படைகளாக பிரிந்து ஏற்காடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர்.
33
விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என ஆனந்த் நம்பிக்கை
ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். கைது செய்யப்பட்டால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்களது கௌரவம் பாதிக்கப்படும். அரசு கூறியதைப் போல எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே எங்கள் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறையைத் தொடர்ந்து இவர்கள் தாக்கல் செய்த மனு வருகின்ற வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.