Published : Oct 13, 2025, 03:51 PM ISTUpdated : Oct 13, 2025, 04:08 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, தவெகவுக்கு 27% மக்கள் ஆதரவு இருப்பதாக சர்வேயில் தெரியவந்ததும், திமுக அரசு தொல்லை கொடுப்பதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) நடத்திய சர்வேயில் கட்சிக்கு 27% ஆதரவு உள்ளது தெரியவந்ததாகவும், இதனால் அச்சமடைந்தே திமுக அரசு தொல்லை கொடுப்பதாகவும் த.வெ.க.வின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, இன்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
24
சர்வே முடிவைப் பார்த்து பயந்த திமுக
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
“தமிழக மக்களிடம் நாங்கள் நடத்திய சர்வேயில் த.வெ.க.வுக்கு 27% வாக்கு ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்துப் பயந்துதான் திமுக அரசு எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறது. எங்களை எந்த அளவுக்கு முடக்க முடியும் என்று பார்க்கிறார்கள். நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். 41 குடும்பங்களுடன் இணைந்து எங்கள் அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.”
34
41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை த.வெ.க. தலைவர் விஜய் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
"நிதியுதவி கொடுத்தோம், மலர் வளையம் வைத்துவிட்டுச் சென்றோம் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்க்கை முழுவதும் தேவையானதைச் செய்து கொடுக்க தலைவர் விஜய் விரும்புகிறார். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்," என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டபோது, கலவரம் வரும் என்று கூறி போலீஸார் அனுமதி மறுத்தனர். ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறை, போலீஸ், ஊடகங்களை அணுக முடியாத சூழல் ஏற்பட்டது. கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கை த.வெ.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்," என்றார்.