2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பான களமாக உள்ளது. சத்தியம் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தை கைப்பற்றப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றே கூறலாம்.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இருப்பது ஒரு வலுவான கூட்டணியாகும்.
ஸ்டாலின் தலைமையின் நிர்வாகம், நலத்திட்டங்கள், பெண்கள் சார்ந்த பயன்கள் திமுகவிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், பழைய தலைமையின் மீது மக்கள் மனதில் கொஞ்சம் சலிப்பு இருக்கலாம். அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு புதிது இல்லை. கொங்கு மண்டலத்தை மீண்டும் கைப்பற்ற அதிமுக பெரும் முயற்சியை மேற்கொள்கிறது.
25
திமுக Vs அதிமுக Vs தவெக
ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற பிரிவுகள் இன்று வரை ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது அதிமுகவின் வாக்குகளை பிளவுபடுத்தும் அபாயம் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை தனி கட்சியாக உள்ளது. வேறு எந்த கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரவில்லை. இருப்பினும் இளைய தலைமுறையினரிடையே தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
அதற்கு முக்கிய காரணம் திமுக, அதிமுக போன்ற இரு திராவிட கட்சிகளை தாண்டிய இளைஞர்கள் எண்ணிக்கை தான். அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து போட்டியிடுகிறது. தமிழ் தேசிய உணர்வு, சீமானின் பேச்சாற்றல், இளைஞர்களிடையே உருவான தனித்துவமான அடையாளம் ஆகியவை இந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கலாம்.
35
கருத்துக் கணிப்பு முடிவுகள்
ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றியைக் காணாதது, வாக்கு விகிதம் நிரந்தரமாக உயரும் நிலையில் இல்லாதது பாதகமாகும். மாற்றம் செய்யும் வாக்காளர்களிடையே தாக்கம் குறைவாகவே உள்ளது. மொத்தத்தில், திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றாலும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கட்சிகள் வலுவாக செயல்பட்டால் தேர்தல் பரபரப்பாக மாறலாம். இளைய வாக்காளர்களின் முடிவுகள், பெண்களின் ஆதரவு மற்றும் கிராமப்புற பிரிவுகளின் வாக்குப் பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
பாஜக மற்றும் அதன் தொடர்பு அமைப்புகள் வெகுஜன ஆதரவை பெற முடியாத நிலையில் உள்ளன. தேர்தல் சமயங்களில் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சத்தியம் தொலைக்காட்சி நடத்திய சர்வே வெளியாகி, மக்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தொகுதிகளின் நிலையை அலசி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது புதிய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக, 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலிலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கோவையை அதிமுகவின் அபாரமான கோட்டையாகவே பலரும் பார்க்கின்றனர். இத்தகைய நிலையை மாற்றுவதற்காகவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாக கோவையில் களமிறக்கினார்.
55
கொங்கு மண்டலம் தொகுதி கணிப்பு 2026
உள்ளாட்சி தேர்தலிலும், பின்னர் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக முன்னிலை பெற்றிருந்தாலும், சட்டமன்ற நிலைமை மாறாமல் இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகவே உள்ளது உள்ளதாக சர்வே முடிவுகள் கூறுகின்றன. 2026 தேர்தலில் அதிமுக மீண்டும் கோவையை கைப்பற்றும் என்பதே சத்தியம் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பின் முடிவு ஆகும்.
மேலும் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், திமுக 105, அதிமுக 90 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 39 இடங்களில் கடுமையான இழுபறி நிலவுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பெரும் ஆதரவு (38), டெல்டா மண்டலத்தில் திமுகவுக்கு அதிக பதவி வாய்ப்பு (31) என்றும் கணிக்கப்பட்டுள்ளது.