ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் 13 முதல் 19 வயது வரையிலான 14,360 பெண்கள் கர்ப்பம்! சொல்வது யார் தெரியுமா?

First Published | Jan 23, 2025, 8:55 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்
வெளியிட்டுள்ள அறிக்கையில்: அளவான குடும்பத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பிறப்புகளுக்கு இடையே போதிய இடைவெளி, திருமண வயதை உயர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை. மருத்துவக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகின்ற நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தாலும், இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. 2019-2020 ஆண்டில் 11,772 என்ற எண்ணிக்கையில் இருந்த இளவயது கர்ப்பம், 2023-2024ம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2023-2024ம் ஆண்டில் கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு இளவயது கர்ப்பம் என்பது மிக அதிகம்.


இளம் வயது திருமணம், இளம் வயதில் திருமணம் செய்துகொள்ள தரப்படும் சமுதாய மற்றும் சமூக அழுத்தம், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த தகவலின்மை ஆகியவை இளவயது கர்ப்பத்திற்கு காரணங்களாகும். இளவயது கர்ப்பம் என்பது சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் தாய்மார்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இது மட்டுமல்லாமல், இருபது வயதிற்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இளவயதினருக்கு பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு 50 விழுக்காடு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

thyroid during pregnancy

பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024ம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வரையிலான 14,360 பெண்கள் கருத்தரித்து இருக்கிறார்கள் என்றால், சட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!