தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.
24
பறக்கும் படைகள்
இவர்களுக்கு தேர்வு எழுத 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுக்கான தேர்வு பணியினை கண்காணிக்க 4858 பறக்கும் படைகளும், 48,426 தேர்வு வரை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல் நாளான நாளை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வின் முதல் 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும் அடுத்த 5 நிமிடம் சுய விவரங்களை விடைத்தாளில் பதிவு செய்வதற்கும், 10.15 மணி முதல் 1.15 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் செல்ல வேண்டும். மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தேர்வு பணிகளில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துதல், மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு உதவுதல் போன்ற தவறான செயல்களுக்கு துணை போகக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.