Accenture New Branch
அக்சென்ச்சர் நிறுவனம்:
சமீப காலமாக, பலரது விருப்பமாக இருப்பது ஐடி துறையில் பணிபுரிவதுதான். அந்த வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் செயல்படும் நிறுவனம் அக்சென்ச்சர். குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னோடியாகவும், அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது. எனவே, அக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை, சேவைகளை ஏற்றுமதி செய்வதை பெரிதும் நம்பியுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட உலகளாவிய ஐடி துறையின் போக்கை உணர்த்தும் ஒரு முக்கிய காட்டியாக விளங்குகிறது.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல், பகுப்பாய்வு, மொபைல் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை அக்சென்ச்சர் வழங்கி வருகிறது. டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஒரு உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமாக இது திகழ்கிறது.
Accenture Job Opportunities
டெலிவரி நெட்வொர்க்:
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு பகுப்பாய்வு மற்றும் மெட்டாவேர்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றத்திற்கும், புதுமைக்கும் உதவுகின்ற ஒரு பெரிய டெலிவரி நெட்வொர்க்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு, தெலுங்கானாவின் ஹைதராபாத், மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஒடிசாவின் புவனேஸ்வர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஹரியானாவின் குருகிராம் ஆகிய இடங்களில் அக்சென்ச்சர் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களில் இதன் கிளைகள் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில், அக்சென்ச்சர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
Accenture Branch in Trichy
திருச்சியில் புதிய கிளை:
தற்போது, அக்சென்ச்சரின் புதிய கிளை திருச்சியில் அமையவுள்ளது. இந்த நிறுவனத்தின் வருகை, திருச்சியின் வளர்ச்சிப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், திருச்சி உலக வரைபடத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து, எதிர்காலத்தில் வேகமான வளர்ச்சிக்க வழிவகுக்கும்.
பெரிய நகரங்கள் முதல் வளர்ந்து வரும் நகரங்கள் வரை அனைத்து நிலைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதை இது உலகிற்கு நிரூபிக்கிறது. இந்த புதிய நிறுவனம் திருச்சியில் அமைவதால், அப்பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.