கொத்து கொத்தா சிக்கிய போதைப்பொருள்! வளைத்து வளைத்து கைது செய்யும் போலீஸ்! அதிர்ச்சியில் சென்னை!
தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு கூட கஞ்சா சர்வசாதாரணமாக கிடைத்து வருகிறது. இதனை உட்கொள்ளும் இளைஞர்கள் கொலை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் விற்பனை
இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 25-ம் தேதி சூளைமேடு அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து கடந்த ஜனவரி 25ம் தேதி அன்று மாலை, சூளைமேடு, அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு 2 கார்களின் அருகில் கொக்கைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த பயாஸ் அகமது, சந்திரசேகர் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
போதைப் பொருள் பறிமுதல்
அதனை தொடர்ந்து ஜனவரி 27ம் தேதி அன்று வாசில் அகமது, அனிருத் சௌத்ரி, அர்ஜுன், ரோகன், நிதிஷ்குமார், ஜுலியன் டிசான், அருண்ராஜ் சென்னை ஆகிய 9 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3.93 கிராம் கொக்கைன், 854 கிராம் கஞ்சா, 11 செல்போன்கள், 2 எடை மெஷின்கள் மற்றும் 3 கார்கள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைப்பு
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த மயூர் புராட் (35), நளிம்பாடி (23), ராயன் டேனி(19), மிக்கேல் (எ) மிக்கி (20), அயன்கான் (21) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 கிராம் எடை கொண்ட கொக்கைன், 850 கிராம் கஞ்சா இலை, 3 கிராம் ஓஜி கஞ்சா, 8 செல்போன்கள், 3 எடைமெஷின்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.