திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு இரண்டு மகள் மற்றும் சபரி முத்து என்கிற ஆகாஷ் (25) என்ற மகன் உள்ளார். நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட அளவிலான பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். இதனையடுத்து, மார்ச் 26ம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும், அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி ஆகாஷ்க்கு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து, அவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஆகாஷின் இரண்டு 2 சிறுநீரங்களும் செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருவாரமாக மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடும் உடற்பயிற்சியுடன், கற்றுடலை கொண்டு வர அதிகளவில் ஸ்டீராய்டு மருந்துகளை கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரிழப்பதற்கு முன்னதாக ஆகாஷ் தனக்கு நேர்ந்த பக்க விளைவு குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், எனக்கு காலையில் பயிற்சிக்கு போகும் இருமல் வந்தது. அந்த இருமலால் ஏற்பட்ட சளியை வெளியில் துப்பும் போது, அதில் ரத்தம் கலந்து இருந்தது. ரத்தம்தான் சளியில் கலந்து வருகிறது என்பதை உணர்ந்தேன். நைட்டு புல்லா தூக்கமே வரவில்லை. மூச்சு விட முடியவில்லை. மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் எப்படி ஏற்படுகிறது தெரியவில்லை.
எனவே பயிற்சியை 30ம் தேதி வரை நிறுத்திவிட்டு மீண்டும் 1ம் தேதியில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் முடியவில்லை. மாத்திரை எடுத்துக்கொண்டாலும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. என்னால் நடக்க முடியவில்லை. ஒர்க் அவுட்டும் அவ்வளவு பண்ண முடியல. கீழ குனிந்து போடும் ஒர்க்அவுட் எல்லாம் மூச்சுத்திணறது. மார்புக்காக போடும் ஒர்க்அவுட்டும் செய்ய முடியவில்லை. இப்பவே என்னால் பேசமுடியவில்லை. அட்ஜஸ்ட் பண்ணித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று ஆகாஷ் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.