chennai
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை. இந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பலவும் இந்த சாலை வழியே செல்கின்றன.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி இன்னோவா சொகுசு கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்றுக்கொண்டிருந்த பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் 2 குழந்தைகள், ஒரு பெண், ஆட்டோ டிரைவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்தனர். இதனையடுத்து காரில் இருந்த தந்தை மற்றும் மகனை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய இன்னோவா காரில் சோதனை செய்த போது, அதில் உகாண்டா நாட்டின் தூதரக காகிதங்கள் அதிகம் இருந்தன. எனவே உகாண்டா தூதாரகத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காரில் ஏதேனும் போதைப்பொருள் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.