சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த வழிதடத்தில் தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பரங்கிமலை யார்டில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. ஆகையால், சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 53 மின்சார ரயில்களின் சேவை இன்று செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வர முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயிகள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து காலையில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
ஆனால், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவேளையில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.