
Who is this Vaibhav Suryavanshi: ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 209 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி வீரர் வெறும் 14 வயதே ஆன பாலகன் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்தார்.
14 வயதில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
14 வயது 32 நாட்களே ஆன அவர் இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் வீரர், இந்த ஐபிஎல் சீசனில் அதிவேக சதம் என பல்வேறு சாதனைகளை படைத்தார். 14 வயதில் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பாலகன் வைபவ் சூர்யவன்ஷி யார்? என்பது குறித்து பார்ப்போம்.
பீகாரில் உள்ள தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ராஜஸ்தான் அணியில் இணைந்த பிறகு தான் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு 14 வயது பிறந்தது. வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் அவருக்கு நான்கு வயதிருக்கும் போது தொடங்கியது.
விவசாயியின் மகன்
விவசாயியான அவரது தந்தை, தனது மகனின் கிரிக்கெட் மீதான அன்பைக் கவனித்தார். மகனை ஊக்குவிக்க அவர்களின் கொல்லைப்புறத்தில் ஒரு சிறிய விளையாட்டுப் பகுதியை உருவாக்கினார், பின்னர் வைபவின் கிரிக்கெட் கனவுகளை ஆதரிக்க தனது பண்ணையை விற்றார். வைபவ் ஒன்பது வயதில் சமஸ்திபூரில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். அங்கு முன்னாள் ரஞ்சி வீரரான மனிஷ் ஓஜாவின் கீழ் பயிற்சி பெற்றார். வைபவ்வின் வாழ்க்கையை வடிவமைப்பதில் மனிஷ் ஓஜா முக்கிய பங்கு வகித்தார்.
இளம் வயதிலேயே அசத்தல் ஆட்டம்
வைபவ் சூர்யவன்ஷி தனது 12 வயதில் பீகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடினார். ஐந்து ஆட்டங்களில் சுமார் 400 ரன்கள் எடுத்தார். ஆந்திராவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட நாற்கரத் தொடருக்காக இந்தியா B அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு அவர் இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்களும், இந்தியா A அணிக்கு எதிராக 8 ரன்களும் எடுத்தார்.
இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி – 14 வயதில் 11 சிக்ஸருடன் 101 ரன்கள்!
வெறும் 58 பந்துகளில் சதம்
இந்த சிறப்பான ஆட்டம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி பீகாரின் ரஞ்சி டிராபி அணியில் சேர்ந்தார். வெறும் 12 வயது மற்றும் 284 நாட்களில் முதல் தர கிரிக்கெட்டில் அவர் அறிமுகமானார். இதன்பிறகு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த இந்த பாலகன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே வெறும் 58 பந்துகளில் சதம் அடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
இதனைத் தொடர்ர்ந்து 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பயணத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இரண்டு அரை சதங்கள் அடித்தார். இது இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அவரது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது லிஸ்ட் ஏ அறிமுகத்தை மேற்கொண்டார்.
விஜய் ஹசாரே டிராபியிலும் அசத்தல்
இதன்பிறகு நடந்த விஜய் ஹசாரே டிராபியிலும் வைபவ் சூர்யவன்ஷி பிரகாசித்தார். டிசம்பர் 31, 2023 அன்று பரோடாவுக்கு எதிராக பீகார் அணிக்காக 42 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஐந்து முதல் தர போட்டிகளில், 10 நிமிடங்களில் 100 ரன்களை எடுத்துள்ளார். ஆறு லிஸ்ட் ஏ போட்டிகளில் 22 நிமிடங்களில் 132 ரன்கள் எடுத்துள்ளார். தனது அதிவேகமான ரன்களை குவிக்கும் திறன் மூலம் இப்போது ஐபிஎல்லிலும் இடம்பிடித்து விட்டார். ஐபிஎல்லிலும் இப்போது தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.
சச்சின், தோனி வரிசையில் இடம் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் – டெல்லியில் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்!