
பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி இறுதிப்போட்டியில் ஈரானை 75-21 என்ற புள்ளிக்கணக்கில் பந்தாடி தங்கம் வென்று சாதனை படைத்தது. உலக அரங்கில் நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்து அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் நமது சென்னையின் கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த கண்ணகி நகர் கார்த்திகா யார்? என்பது குறித்து பார்ப்போம். சென்னையின் தெற்கே புறநகர் பகுதியாக அமைந்துள்ளது கண்ணகி நகர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்கள் வாழ்வதற்காக கடந்த 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் கண்ணகி நகர்.
தாய் ஆட்டோ டிரைவர்
கண்ணகி நகரில் 23,704 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இங்கு வாழ்பவர்களின் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள். சிலர் சென்னை மாநகரை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களாக உள்ளனர். இங்கு ஒரு ஏழ்மையான வீட்டில் பிறந்தவர் தான் கார்த்திகா. இவரது தந்தை ரமேஷ் சென்டரிங் வேலை செய்து வருகிறார். இதுரது தாய் சரண்யா தூய்மை பணியாளராக இருந்தவர். இப்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வறுமையின் பிடியில் வளர்ந்தாலும் சிறு வயது முதலே எதாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கார்த்திகா மனதில் இருந்து வந்தது. ஒருபக்கம் படிப்பில் கவனம் இருந்தாலும் மறுபக்கம் விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் கொண்ட கார்த்திகா, கண்ணகி நகரின் அருகிலுள்ள பொது மைதானங்களில், பள்ளி நண்பர்களுடன் கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியுள்ளார். இதில் கபடி மீது அவர் தீராத காதல் கொண்டார்.
தந்தையின் பழைய ஷூக்களை அணிந்து பயிற்சி
தனது 10 வயதில் ஒரு உள்ளூர் கபடி போட்டியில் காலடி பதித்துள்ளார். தொடர்ந்து 6ம் வகுப்பில் இருந்தே பள்ளிகள் அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்து கண்ணகி நகர் மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். ஏழ்மை நிலை என்பதால் தினசரி காலை 5 மணிக்கு எழுந்து தந்தையின் பழைய ஷூக்களை அணிந்து அருகிலுள்ள மணல் மைதானத்தில் பயிற்சி செய்து வந்தார் கார்த்திகா.
மகளின் ஆர்வத்தை அறிந்த பெற்றோர் தங்கள் சம்பாதிக்கும் சொற்ப ஊதியத்தையும் வைத்து கார்த்திகாவை ஒரு கிளப்பில் பயிற்சி பெற சேர்த்து விட்டு ஊக்குவித்தனர். அங்கு பயிற்சியாளரின் உதவியுடனும், தனது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்துடனும் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் அசத்திய கார்த்திகா, இந்திய இளையோர் அணியிலும் இடம்பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கண்ணகி நகர் மீதான பார்வையை மாற்றிய கார்த்திகா
கார்த்திகா இப்போது கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். 11ம் வகுப்பு படித்து வரும் இவரது தங்கை காவியாவும் கபடி வீராங்கனை தான். பொதுவாக சென்னையில் கண்ணகி நகர் என்றாலே குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிகம், போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக பெரும்பாலான சினிமாக்களில் காட்டப்பட்டுள்ளது.
சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் கண்ணகி நகர் என்றால் அப்படி தான் இருக்கும் என்பது போன்ற விஷமத்தனமான கருத்துகள் ஒரு சிலர் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தனது வெற்றியின்மூலம் கண்ணகி நகர் மீதான ஒரு சிலரின் பார்வையையே அடியோடு மாற்றியுள்ளார் தங்க மங்கை கார்த்திகா.