
Royal Challengers Bangalore strengths and weaknesses: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 திருவிழா நாளை (மார்ச் 22) முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடக்க நாளில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்க்கு அடுத்து அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பது ஆர்சிபி தான்.
ஆனால் ஐபிஎல்லின் தொடக்க காலத்தில் இருந்து விளையாடி வரும் ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. அதுவும் 'கிரிக்கெட்டின் கிங்' உலகின் நம்பர் வீரர் விராட் கோலி இருந்தும் ஆர்சிபியால் கோப்பையை கையில் ஏந்த முடியாமல் இருப்பது தான் பரிதாபத்தின் உச்சம். 'நடந்தது முடிந்து விட்டது; இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்' என்ற அடிப்படையில் 2025 சீசனில் ஆர்சிபி அணி இளம் கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்குகிறது.
புதிய ஆர்சிபி அணியின் பலம், பலவீனம் என்ன? இந்த முறை கோப்பையை கையில் தூக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து பார்க்கலாம்.
ஆர்சிபி அணியின் பலம்
விராட் கோலி என்னும் ரன் மெஷன்
அப்போதில் இருந்து இப்போது வரை ஆர்சிபி அணியின் பெரும் பலம் விராட் கோலி. கடந்த சீசனில் மட்டும் 5 அரை சதம், 1 சதத்துடன் 741 ரன்கள் குவித்துள்ள கிங் கோலி ஆர்சிபிக்காக மொத்தமாக 800 ரன்கள் அடித்து மலைக்க வைத்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமின்றி களத்தில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் விராட் கோலி, தனது அனுபவம் மூலமாக கேப்டன் ரஜத் படிதாருக்கும், மற்ற இளம் வீரர்களுக்கும் பெரும் உத்வேகமாக இருப்பார்.
அதிரடி வீரர்களின் அணிவகுப்பு
ஆர்சிபி அணியில் லியோம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், டிம் டேவிட் என அதிரடி சூரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இந்த 3 பேருமே ரசிகர்கள் மாடத்தில் பந்துகளை பறக்க விடுவதில் வல்லவர்கள். இதில் ஒருவரது பேட்டிங் கைகொடுத்தாலும் அந்த நாள் ஆர்சிபிக்கு உரியதாக மாறி விடும்.
IPL: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ரியான் பராக் நியமனம்! சஞ்சு சாம்சனுக்கு என்னாச்சு?
அனுபவ பவுலர்களின் ஆதிக்கம்
ஆர்சிபி அணியில் ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் என்ற அனுபவ வீரர்கள் இருப்பது கூடுதல் பலமாகும். 176 போட்டிகளில் 181 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ள புவனேஷ்வர் குமார் புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவர். மறுபக்கம் ஹேசில்வுட் ஒரே லைன் அண்ட் லெந்த்தில் தொடர்ந்து பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்.
ஆர்சிபி அணியின் பலவீனம்
கேப்டன்சி அனுபவமின்மை
31 வயதான ரஜத் படிதார் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஜத் படிதாருக்கு கேப்டன்சியில் அனுபவம் கிடையாது. இதனால் அணியை எப்படி வழிநடத்துவது? பவுலர்களை எப்படி ரொட்டேட் செய்வது? என்பதில் அவர் சிரமங்களை சந்திப்பார். விராட் கோலி அவருக்கு உதவி செய்வார் என்றாலும் ஒரு கட்டத்தில் கோலியின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதா? இல்லை தானே முடிவெடுப்பதா? என்பதில் ரஜத் படிதாருக்கு குழப்பங்கள் வரலாம்.
அதிக ஆல்ரவுண்டர்கள் இல்லை
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டையும் செய்யகூடிய ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். ஆர்சிபி அணியை எடுத்துக் கொண்டால் குர்ணால் பாண்ட்யா, ஜேக்கப் பெத்தலை தவிர வேறு ஆல்ரவுண்டர்கள் கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீசுவார் என்றாலும் பெரிய ஸ்பின்னர் கிடையாது. ஜேக்கப் பெத்தலுமே இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம். ஆகவே ஆர்சிபியில் முழுமையான ஒரே ஆல்ரவுண்டராக குர்ணால் பாண்ட்யா மட்டுமே உள்ளார்.
ஸ்பின்னர்களின் பற்றாக்குறை
ஆர்சிபி அணியில் ஸ்பின் பந்து போடக்கூடிய ஸ்விப்னில் சிங், குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன் உள்ளனர். இவர்கள் 3 பேருமே வியக்கத்தக்க ஸ்பின்னர்கள் கிடையாது. குர்ணால் ஸ்பின் போடுவார் என்றாலும் தொடர்ந்து அவரால் சிறப்பாக பந்துவீச முடியுமா? என்பது கேள்விக்குறியே. லிவிங்ஸ்டன் ஒரு பார்ட் டைம் பவுலர். அவர் பந்து எடுபடுமா? என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆர்சிபி அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, பில் சால்ட், லியோம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்ணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.
ஐபிஎல்லில் 2 புதிய விதிகள் வருகிறது! பவுலர்களுக்கு இனி கொண்டாட்டம்! என்ன ரூல்ஸ்?