India vs England T20
இந்தியா-இங்கிலாந்து டி20 சீரிஸ்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்பு விளையாடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
India vs England 2nd T20
இந்தியா சூப்பர் பார்ம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 3வது சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இந்திய அணியில் முதல் போட்டியில் அதிரடி அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா, ஒரே ஓவரில் 22 ரன்கள் நொறுக்கிய சஞ்சு சாம்சன் சூப்பர் பார்மில் உள்ளனர். முதல் ஆட்டத்தில் ஏமாற்றிய சூர்யகுமார் யாதவ் இன்று அசத்த காத்திருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.
பவுலிங்கை பொறுத்தவரை அர்ஷ்தீப் சூப்பராக பந்துவீசினார். முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி இன்றும் அசத்த ரெடியாக இருக்கிறார். அக்சல் படேல், ரவி பிஷ்னோய் சுழலில் அசத்துகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை முதல் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் முடங்கியது.
2024 ஐசிசி டெஸ்ட் அணி: ரோகித், கோலிக்கு ஆப்பு; 3 இந்திய வீரர்களுக்கு இடம்; கேப்டன் யார்?
Gus Atkinson
இங்கிலாந்து அணி எப்படி?
கேப்டன் ஜோஸ் படலர் மட்டும் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். பென் டக்கெட், பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஹாரி ப்ரூக் என அனைத்து அதிரடி வீரர்களும் இன்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டாலும் மார்க் வுட் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக உள்ளது.
சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாகும். இந்த பிட்ச்சில் பந்து நன்றாக சுழன்று திரும்பும். இதனால் இந்திய அணி முதல் டி20 போட்டியை போன்று அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி என 3 ஸ்பின்னர்களுடன் விளையாடும். அதே வேளையில் தொடக்கத்தில் பாஸ்ட் பவுலர்களுக்கும் கொஞ்சம் ஸ்விங் கிடைக்க வாய்ப்புள்ளது.
Indian Cricket Team
பனியின் தாக்கம் இருக்கும்
இங்கு விளையாடிய 2 போட்டிகளில் இந்தியா ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதாவது 2012ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியும், 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியும் கண்டுள்ளது. சேப்பாக்கத்தில் கடைசியாக நடந்த 10 ஐபிஎல் போட்டிகளை எடுத்துக் கொண்டால் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2வது பாதியில் பவுலிங் செய்வது மிகவும் கடினம். ஈரப்பதம் காரணமாக பந்து வழுக்கிக் கொண்டு செல்வதால் ஸ்பின்னர்களுக்கு சரியான ஸ்கிரிப் கிடைக்காது. ஆகவே டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யும் என்பதால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாட் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
ரஞ்சி டிராபி: ரோகித், பண்ட் மீண்டும் சொதப்பல்; தனி ஆளாக ஜொலித்த ஜடேஜா; 12 விக்கெட்!