
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம் கோரியா என்ற பகுதியில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்துள்ளார். இவரது தந்தை நேவியில் முதன்மை பொறியியலாளர். மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்பதற்கு முன்னதாக டென்னிஸ், குத்துச்சண்டை, ஸ்கேட்டிங், மணிப்பூர் தற்காப்பு கலையான Huyen langlon ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.
இந்த விளையாட்டுகளில் தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்களியும் வென்றுள்ளார். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2017 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் 9 தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் நடைபெற்ற 2018 சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பாக்கர் தங்கப் பதக்கம் வென்றார். தனது 16 வயதில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் தங்கப் பதக்கம் வென்றார். ஆனால், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 25மீ ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற பாக்கர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யூத் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இதே போன்று 2019 ISSF உலகக் கோப்பை தொடரில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் சுற்றில் 4ஆவது இடம் பிடித்து தகுதி பெற்றார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 25மீ பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்றார். இந்த நிலையில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இதன் மூலமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும், 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்று விளையாடிய மனு பாக்கர் மகளிருக்கான ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சந்தீப் சிங் உடன் இணைந்து தகுதிச் சுற்று போட்டியில் விளையாடுகிறார். இந்தப் போட்டி நாளை பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.
இதே போன்று, மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் விளையாட இருக்கிறார். இந்தப் போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.