
இந்திய ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் காலத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
2ஆவது முறையாக இந்திய அணி டிராபி வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அவருக்கு வயதும், திறமையும் இருக்கும் போது ஏன் ஓய்வு அறிவித்தார் என்பது புரியாத புதிர். இருந்தாலும் இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை ஏராளமான ரசிகர்கள் அவரை பின் தொடர காரணமாயிற்று. அவரது திறமை மட்டுமின்றி அவரது தோத்திற்கும் ஸ்டைலான இந்திய பேட்ஸ்மேனாக பலரும் கருதுகின்றனர். கிரிக்கெட் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு அவரை பல ஆண்டுகளாக பிரபல கிரிக்கெட் வீரராகவே வைத்திருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். கிரிக்கெட் மட்டுமின்றி நாள்தோறும் வாழ்க்கையிலும் ஒழுக்கம், உடற்தகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்திய அணிக்கு 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்த கூல் கேப்டன் எம்.எஸ்.தோனியிடமிருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொண்ட விராட் கோலி, 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக தனது முதல் போட்டியில் அடிலெய்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்தார்.
2017 ஆம் ஆண்டில் தோனிக்கு பிறகு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றுக் கொண்டார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி வரை சென்றது. இதே போன்று 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த நிலையில் தான் ஒவ்வொரு இளைஞருக்கும் ரோல் மாடலாக திகழும் விராட் கோலியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 5 விதமான பாடங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…
வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்பை மதிக்க வேண்டும்:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி டிராபி வென்ற பிறகு பேசிய விராட் கோலி உணர்ச்சி வசப்பட்டு இந்தியில் பேசினார். அதில், ஒருவர் மட்டுமே முன்னேற முடியும். அவர் யார் என்றால், எவர் ஒருவர் வாய்ப்பிற்கு மதிப்பளிக்கிறாரோ அவரால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு டிராபியை விராட் கோலி வென்றார். ஐபிஎல் தொடரில் ஆக்ரோஷமாக காணப்பட்ட கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் சொதப்பினாலும், இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி அடித்துக் கொடுத்த 76 ரன்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்த தொடரில் மட்டும் கோலி 156 ரன்கள் எடுத்தார்.
கடவுளின் திட்டத்தை நம்ப வேண்டும்:
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திட்டத்தை கடவுள் வகுத்து வைத்திருக்கிறார். கடவுள் திட்டத்தை நம்ப வேண்டும். கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையானது சாதனைகளால் நிறைந்தது. 2008 ஆம் ஆண்டு அண்டர்18 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்று அனைவரது கவனம் ஈர்த்தார்.
சச்சின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார். கோலி தனது முதல் போட்டியிலே சதம் விளாசி சாதனை படைத்தார்.
இவ்வளவு ஏன், 2013 ஆம் ஆண்டில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதில் விராட கோலி குறிப்பிடத்தக்க சாதனையை படைத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் 2 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரு முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
கடினமாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்:
ஒவ்வொரு முறையும் மோசமான ஃபார்முக்கு வரும் போது, நான் கடினமாக உழைக்கப் போகிறேன், மீண்டும் எழுந்திருக்க போகிறேன் என்று ஒரு ஆன்லைன் நேர்காணலின் போது கூறியிருக்கிறார். இவ்வளவு ஏன், கோவிட் நேரத்தில் கோலி கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டார். அப்போது, சர்வதேச சதம் அடிப்பதற்கு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார்.
இந்த தருணத்தில் கோலியின் கேப்டன் பதவி ரோகித் சர்மா வசம் ஒப்படைக்கப்பட்டது. சர்மா டி20 உலகக் கோப்பை 2024ல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கோலியை எத்தனையோ பேர் வெளியேற்றினாலும் தொடர்ந்து கடினமாக உழைத்தார். 2022 டி20 உலகக் கோப்பையின் போது மறுபிரவேசம் எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 159 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கோலி அதிரடியாக விளையாடி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ரிஸ்க் எடுக்க வேண்டும்:
ரிஸ்க் எடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. பாதுகாப்பான விருப்பம் என்று எதுவும் கிடையாது. வாழ்க்கையில் பாதுகாப்பான விஷயம் என்று எதுவும் கிடையாது. ஆதலால், வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது முக்கியம். ஆரம்பத்தில் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப தனது வியூகங்களை வகுத்து விளையாடி வந்த கோலி அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
அதோடு ஆக்ரோஷமான மற்றும் தூக்கி அடிக்கும் வான்வழி ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடினார். இது அவரது பேட்டிங் ஸ்டைலில் மாற்றத்தை கொண்டு வந்தது.
விடிவதற்கு முன்பு இரவு இருட்டாக தான் இருக்கும்:
டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய எல்லா போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், அவரை நீக்க வேண்டும் என்று கூட விமர்சனம் எழுந்தது. ஆனால், கடைசியில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவே அவர் இருந்தார். அவரது 76 ரன்கள் தான் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று டிராபியை கைப்பற்ற வழி வகுத்தது.
2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகக் கோப்பை தொடரில் கோலி 11 இன்னிங்ஸ்களில் 765 ரன்கள் குவித்தார்.