ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வலுவான அணி என்றும், கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட ஜாம்பவான்களே கருத்து கூறியிருந்தனர். அதற்கேற்ப முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றது.
198 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 192 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் 7ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 18 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். 200 ஸ்டிரைக்ரேட்டில் ஆடிய அவர் ரன் அவுட்டாகி வெளியேறினார். ரியான் பராக்கிற்கும் கீழாக ஹெட்மயர் இறக்கிவிடப்பட்டார். ஆட்டம் கிட்டத்தட்ட கைமீறி போன பின் கடைசியாக ஹெட்மயரை இறக்கிவிட்டு என்ன பயன்..? அவரை கொஞ்சம் மேலே இறக்கிவிட்டிருக்க வேண்டும் என்று சேவாக் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், ஷிம்ரான் ஹெட்மயருக்கு பேட்டிங் ஆட போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. அவர் 200 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்து என்ன பயன்..? ரியான் பராக்கிற்கு முன்பே அவர் களமிறங்கியிருக்க வேண்டும். சொல்லப்போனால் தேவ்தத் படிக்கல்லுக்கு முன்பாகவே அவரை 4ம் வரிசையில் இறக்கிவிடலாம். ஷிம்ரான் ஹெட்மயர் வெஸ்ட் இண்டீஸுக்காக ஆடியபோது இந்தியாவில் சதமடித்திருக்கிறார். இந்திய கண்டிஷனும் அவருக்கு நன்றாக தெரியும். ராஜஸ்தான் ராயல்ஸுக்காக கடந்த சீசனில் அபாரமாகவும் ஆடியிருக்கிறார். டெல்லி கேபிடள்ஸுக்காக ஆடியபோதிலும் சிறப்பான பங்களிப்பை செய்து அந்த அணி ஃபைனலுக்கு முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
IPL 2023:சீனியர் வீரரை தூக்கி எறியும் KKR! வேற வழியின்றி RCB-யில் ஒரு மாற்றம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
அதனால் ஷிம்ரான் ஹெட்மயர் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் மேலே இறக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அபாயகரமான பேட்ஸ்மேன். மேலே இறக்கிவிட்டிருந்தால் ஒருவேளை அவர் சீக்கிரம் அவுட்டாகியிருக்கலாம். பின்வரிசையில் இறங்கினால் மட்டும் சீக்கிரம் அவுட்டாகமாட்டாரா..? டாப் 4ற்குள் இறங்கி செட்டில் ஆகிவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடி போட்டிகளை ஜெயித்து கொடுப்பார். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்று சேவாக் விமர்சித்துள்ளார்.