
Virat Kohli Retained as RCB Captain for IPL 2025: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட இன்று தான் கடைசி. ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்துள்ளன. அதன்படி ஒரு அணியில் கேப்டன்களாக இருந்த வீரர்கள் மற்றொரு அணிக்கு செல்ல இருக்கின்றனர். மேலும், வீரர்களாக இடம் பெற்று விளையாடியவர்களுக்கு கேப்டனாகவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எந்த ஐபிஎல் 2025 தொடரிலும் இல்லாத எதிர்பார்ப்பு இந்த ஐபிஎல் தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன காரணம் என்று கேட்டால் யார் யார் எந்த அணியில் இடம் பெறுவார்கள், அப்படி இடம் பெறும் வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் தோனி அன்கேப்டு வீரராக ரூ.4 கோடிக்கு அணியில் இடம் பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் இதுவரையில் விளையாடிய 17 சீசன்களில் ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக திரும்ப வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபிக்காக விளையாடி வரும் கோலி 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் கேப்டனாக இடம் பெற்று விளையாடியுள்ளார். ஆனால், ஒரு முறை கூட டிராபி ஜெயிக்கவில்லை.
கோலி தலைமையிலான ஆர்சிபி 2016 ஆம் ஆண்டு மட்டுமே இறுதிப் போட்டி வரை வந்து ஹைதராபாத் அணியிடம் தோற்று 2ஆவது இடம் பிடித்தது. அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றில் இடம் பெற்ற ஆர்சிபி எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
ஆர்சிபி அணியில் மட்டும் இதுவரையில் 7 கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். ராகுல் டிராவிட் 2008 ஆம் ஆண்டு முதல் சீசன் மட்டுமே கேப்டனாக இருந்தார். கெவின் பீட்டர்சன் 2009 ஆம் ஆண்டு கேப்டனாக இருந்தார். அனில் கும்ப்ளே 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் கேப்டனாக இருந்தார். டேனியல் வெட்டோரி 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் கேப்டனாக இருந்தார். இதில் சில போட்டிகளுக்கு கோலி கேப்டனாக இருந்தார்.
அதன் பிறகு 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். இந்த 11 ஆண்டுகளில் விராட் கோலி 140 போட்டிகளில் கேப்டனாக இருந்து 64 போட்டிகளுக்கு வெற்றியும், 69 போட்டிகளுக்கு தோல்வியும் பெற்று கொடுத்துள்ளார். 3 போட்டிகள் டையில் முடிய 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. இதில் வெற்றி சதவிகிதம் 48.16 ஆகும்.
இதே போன்று 2017ல் ஷேன் வாட்சன் கேப்டனாக இருந்தார். 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஃபாப் டூப்ளெசிஸ் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். பேட்டிங் சிறப்பாக இருந்தால் பவுலிங்கில் கோட்டைவிடும் ஆர்சிபி, பவுலிங்கில் சிறப்பாக இருந்தால் பேட்டிங்கில் கோட்டைவிடும். இப்படி மாறி மாறி தவறுகளை செய்து கடைசி வரை ஒரு முறை கூட டிராபி அடிக்காத அணிகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட இருக்கின்றனர். இதில் ஆர்சிபி அணியிலிருந்து இந்திய வீரர்களான விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் விராட் கோலி கேப்டனாக திரும்ப வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கேப்டனாக திரும்ப வருகிறார் என்றால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்பார்.
இவரது தலைமையிலான ஆர்சிபி எப்படியும் இந்த முறை டிராபி அடிக்க கடுமையாக முயற்சிக்கும். அதற்காக வலிமையான வீரர்களை நவம்பரில் நடைபெற இருக்கும் ஏலத்தில் எடுக்கும். சிறந்த ஆல் ரவுண்டர்களும் அணியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணம் தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து ராகுல் விலகுகிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடி வரும் விராட் கோலி மொத்தமாக 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 55 அரைசதங்கள் மற்றும் 8 சதங்கள் உள்பட மொத்தமாக 8004 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 37 முறை அவுட்டாகவில்லை.