
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக விளையாடி ஓய்வு பெறக் கூடிய வீரர் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதிக வருமானத்தை கொடுக்க கூடிய திருவிழா எது என்றால் அது ஐபிஎல் தொடர். இந்த தொடரில் இடம் பெற்று விளையாடும் வீரர்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். உதாரணத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்டார்.
இதுதவிர போட்டியில் அவர் எடுக்கும் விக்கெட்டுகள், பரிசுகள், ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகள் மூலமாக வருமானம் கிடைக்கும். இதே போன்று தான் ஒவ்வொரு வீரர்களுக்கும். ஆனால், இந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டி முழுவதும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும் வகையில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 கேப்டு வீரர்கள் மற்றும் 2 அன்கேப்டு வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் நடைபெற்ற 17 ஐபிஎல் தொடர்களில் எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு தலா 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளன. மேலும், இருவரும் சிறந்த ஐபிஎல் கேப்டன்கள் என்ற பெயரும் பெற்றுள்ளனர். தற்போது இருவருமே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது இருவருமே ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனியை தக்க வைக்குமா? அல்லது விடுவிக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தோனி ஒரு பகுதியாக இருந்தார். அப்போது ரூ.6 கோடிக்கு சிஎஸ்கே அணியில் இடம் பெற்றார். இதே போன்று ரோகித் சர்மாவும் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஒரு பகுதியாக இருந்தார். அதன் பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று பின்னர் 2011 ஆம் ஆண்டு ஏலத்திற்கு திரும்பிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் 17 சீசன்களிலும் ஏலத்தில் பங்கேற்காத ஒரு வீரர் இருக்கிறார் என்று கேட்டால் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, அவர் தான் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அப்போது அவரது சம்பளம் ரூ.12 லட்சம். தற்போது ரூ.15 கோடிக்கு ஆர்சிபிக்காக விளையாடி வருகிறார்.
ஆர்சிபி அணியில் ரன் குவிப்பதில் பல போராட்டங்கள் இருந்த போதிலும் ஆர்சிபி தொடர்ந்து கோலியை ஆதரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக விராட் கோலியை தக்க வைத்துக் கொண்டது. அதன் பிறகு அவரைப் பற்றி சற்றும் யோசிக்கவில்லை. தொடர்ந்து ஆர்சிபிக்காக தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வருமானம் பெற்றவராக விராட் கோலி இருந்தார். அப்போது அவருக்கு ரூ.17 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது.
2011, 2014, 2018 மற்றும் 2022 ஐபிஎல் மெகா ஏலங்களுக்கு முன்பு விராட் கோலி ஆர்சிபியால் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார். இதன் மூலமாக ஆர்சிபி உடனான கோலியின் எதிர்காலம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இனி வரும் ஒவ்வொரு சீசன்களிலும் விராட் கோலி ஆர்சிபிக்காக விளையாடி ஏலத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அனைத்து சீசன்களிலும் இடம் பெற்று விளையாடும் ஒரே வீரராக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இத்தனை ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட ஆர்சிபி டிராபி அடிக்கவில்லை. மூன்று முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடி தோல்வியை தழுவியிருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக விராட் கோலி கண்டிப்பாக ஆர்சிபிக்காக டிராபியை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமர் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு T20I கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி அணியில் விராட் கோலி, முகமது சிராஜ், ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன், இவர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்று கேட்டால் அதற்கான விளக்கம் இதோ…
விராட் கோலி – ரூ.15 கோடி
இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஆர்சிபி அணியில் விராட் கோலி ரூ.15 கோடிக்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதம், ஒரு சதம் உள்பட மொத்தமாக 741 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 113* ரன்கள் அடங்கும்.
முகமது சிராஜ் – ரூ.7 கோடி
ஆர்சிபிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் கடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதோடு, 496 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக முகமது சிராஜ் ஆர்சிபி அணியில் ரூ.7 கோடிக்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜத் படிதார்:
ரூ.50 லட்சத்திற்கு ஆர்சிபி அணியில் ஏலம் எடுக்கப்பட்ட ரஜத் படிதார், ஐபிஎல் 2024 தொடரில் விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 395 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். ஆதலால், அவர் இந்த ஆண்டும் அணியில் தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஆர்சிபி குறைந்தது ரூ.4 கோடி கொடுக்கும் என்று தெரிகிறது.
யாஷ் தயாள்:
முகமது சிராஜ் உடன் ஒப்பிடுகையில் யாஷ் தயாள் 14 போட்டிகளில் விளையாடி 459 ரன்கள் கொடுத்துள்ளார். ஆனால், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபியானது யாஷ் தயாளை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதே தொகையுடன் யாஷ் தயாள் ஆர்சிபி அணியில் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.