Varun Chakravarthy T20 ICC Ranking: வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, ஐசிசி ஆண்கள் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் 818 புள்ளிகளுடன் தனது தனிப்பட்ட சிறந்த தரமதிப்பை எட்டி புதிய சரித்திரம் படைத்துள்ளார். வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
24
T20 தரவரிசையில் அதிக ரேட்டிங்
குறிப்பாக, தரம்சாலாவில் நடந்த மூன்றாவது இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 போட்டியில், நான்கு ஓவர்களில் 11 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் 7 விக்கெட் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
818 தரமதிப்பு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள வருண் சக்கரவர்த்தி தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியை (699) விட 119 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். மேலும், டி20 பந்துவீச்சில் அதிகபட்ச தரமதிப்பைப் பெற்ற முதல் 10 வீரர்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார்.
34
இந்தியாவின் துருப்புச்சீட்டு வருண் சக்கரவர்த்தி
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இது இந்திய அணிக்கு ஒரு சரியான நேரத்தில் கிடைத்த ஊக்கமாகும். குறுகிய வடிவ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கோப்பைகளை வெல்லும் இந்தியாவின் முயற்சியில் வருண் சக்கரவர்த்தி ஒரு முக்கிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் இந்தியாவிற்கு மேலும் ஒரு நல்ல செய்தியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் தற்போது இரண்டு இந்திய வீரர்கள் உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடிய திலக் வர்மா, இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். சக வீரர் அபிஷேக் சர்மா பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.