
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் விளாசி இந்திய அணிக்கு இரட்டை சதங்கள் எண்ணிக்கையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு வரிசையாக விரேந்திர சேவாக், ரோகித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷான் ஆகியோர் வரிசையாக இரட்டை சதங்கள் குவித்தனர்.
இந்திய அணியின் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடினார். இதில், பல சாதனைகளையும் தனதாக்கிக் கொண்டார். சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என்று மொத்தமாக 34,283 ரன்கள் குவித்துள்ளார். இவரது சாதனையை இதுவரையில் எந்த வீரரும் முறியடிக்கவில்லை.
இதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இந்த சாதனையை விராட் கோலி கடந்த 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முறியடித்தார். மேலும், 50 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை இனிமேல் எந்த வீரராலும் முறியடிக்க முடியாது. விராட் கோலி கூட 80 சதங்கள் அடித்திருக்கிறார். இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் விளையாடினால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும்.
ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆதலால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர் அடித்த 200 ரன்கள் சாதனைக்கு பிறகு அவர் அடித்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டி கூட நடத்தப்படவில்லையாம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் 2ஆவது ஒருநாள் போட்டி குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் கடைசி வரை அவுட்டாகாமல் நின்று 200 ரன்கள் குவித்து புதிய சரித்திரம் படைத்தார்.
200 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை தனக்கு சொந்தமாக்கினார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே எடுத்து 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டிக்கு பிறகு இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டி கூட நடத்தப்படவில்லை.
இந்த மைதானத்தில் மொத்தமே 12 ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில், 8 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. முதல் முறையாக 1988 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்த மைதானத்தில் முதல் சர்வதேச போட்டி நடைபெற்றது. இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வாகை சூடியது. முதலில் ஹாக்கி மைதானமாக இருந்த ரூப் சிங் ஸ்டேடியம், நாளடைவில் கிரிக்கெட் ஸ்டேடியமாக மாற்றப்பட்டது.
ஒலிம்பிக்கில் ஹாக்கியில் 2 முறை தங்கப் பதக்கம் வென்ற ரூப் சிங்கின் நினைவாக இந்த மைதானத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. முதல் முறையாக முதல் பகல் இரவு போட்டியாக 1996 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடர் நடத்தப்பட்டது. இதில், டெல்லிக்கு எதிராக நடத்தப்பட்ட போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. பல சர்ச்சைகளை சந்தித்து வந்த இந்த மைதானத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சர்வதேச போட்டி கூட நடத்தப்படவில்லை.
தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு குவாலியரில் முதல் முறையாக சர்வதேச போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், அது வேறொரு புதிய மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதுவும் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டி20 போட்டி நடத்தப்படுகிறது. அதுவும், புதிய மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ஜியோ சினிமாவில் இந்த போட்டியானது லைவ் ஸ்டீரிமிங் செய்யப்படுகிறது.
நாளை இரவு 7 மணிக்கு இந்த போட்டிக்கு இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நாளை குவாலியரில் தொடங்குகிறது.