
ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2024: டி20 உலகக் கோப்பையை வென்று அசத்திய ரோகித் படையின் உத்வேகத்துடன் களமிறங்கிய மகளிர் அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தோல்வியுடன் தொடங்கியுள்ளது. இந்த சிறிய கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி ரன் சேசிங் செய்வதில் தடுமாறியது. முதலில் பேட் செய்து 160 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி பந்துவீச்சிலும் அசத்தியது. இதனால் இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.
நியூசிலாந்து பேட்டிங் :
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு மிக சிறப்பான தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான பெய்ட்ஸ் 27 ரன்கள் (24 பந்துகளில்), ப்ளிம்மர் 34 ரன்கள் ( 23 பந்துகளில்) அருமையாக ஆடி 67 ரன்கள் சேர்த்தனர்.
ஆனால் அடுத்தடுத்து ஓப்பனர்கள் இருவரும் அவுட் ஆன போதிலும் நியூசிலாந்து அணியின் வேகம் குறையவில்லை. கேப்டன் டிவைன் இந்திய பந்துவீச்சாளர்களை நைய புடைத்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.
இந்திய அணியை சின்னாபின்னமாக்கிய நியூசிலாந்து
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர் ஷஃபாலி வர்மா வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 11 ரன்களுக்கு இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது தொடங்கிய விக்கெட் சரிவு தொடர்ந்ததால் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
ஸ்மிருதி மந்தனா 12, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 15, ஜெமிமா 13, ரிச்சா கோஷ் 12, தீப்தி சர்மா 13, அருந்ததி ரெட்டி 1, பூஜா வஸ்த்ரகர் 8, ஸ்ரேயங்கா பட்டீல் 7, ஆஷா ஷோபனா 6(ஆட்டமிழக்காமல்), ரேணுகா தாக்கூர் 0 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி19 ஓவர்களில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் ரோஸ் மேரி 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளும். லியா தஹுஹு 3, இடன் கார்சன் 2, அமெலியா 1 விக்கெட் வீழ்த்தினர்.
புள்ளி பட்டியல்:
முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 'ஏ' பிரிவு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இலங்கையுடனான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதற்கிடையில் 'பி' பிரிவில் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதில் வங்கதேசம் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து அணிகள் தலா ஒரு தோelf வுடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை.