
India vs New Zealand Test Cricket :இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இதில் ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மாயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. பெங்களூரு வந்துள்ள நியூசிலாந்து வீரர்கள் அங்கு சுற்றிப் பார்க்க சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளன.
அதில் பெங்களூரு பேலஸ், திப்பு சுல்தான் சம்மர் பேலஸ், லால் பாக் தாவரவியல் பூங்கா, நந்தி ஹில்ஸ், கப்பன் பார்க், நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட், அல்சூர் ஏரி, அரசு மியூசியம் என்று பல இடங்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில் இந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.
பல மாநிலங்களிலிருந்து வரும் இந்திய வீரர்கள் கூட இந்த இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கலாம். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 62 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. நியூசிலாந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
எஞ்சிய 27 போட்டிகளுமே டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 3 போட்டியில் ஜெயித்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முன்னாள் வீரர்களே இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராகுல் டிராவிட் நியூசிலாந்திற்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்கள், 6 சதங்கள் உள்பட மொத்தமாக 1659 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 222 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 24 போட்டிகளில் விளையாடி 1595 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 8 அரைசங்கள், 4 சதங்கள் அடங்கும். மேலும், அதிகபட்சமாக 217 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள், 4 சதங்கள் உள்பட 1224 ரன்கள் குவித்து 3ஆவது இடத்தில் இருக்கிறார். இதில் அதிகபட்சமாக 302 ரன்கள் குவித்துள்ளார்.
இதே போன்று பவுலிங்கில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில், சிறந்த பந்து வீச்சாக 7/59 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லீ 14 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இதில் சிறந்த பந்து வீச்சாக 7/23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது பிஷான் பேடி. இவர், 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் சிறந்த பந்து வீச்சாக 6/42 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பட்டியலில் இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 98 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டு டைட்டில் வின்னராக இருந்த நியூசிலாந்து தற்போது 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. 36 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான ரேஸில் நியூசிலாந்து இடம் பெற வாய்பில்லை என்று தெரிகிறது.
இந்தியாவிற்கு போட்டியாக வருவது இலங்கை. இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடிய இலங்கை, 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.