
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுலின் பொறுப்பான சதத்தால் 245 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கரின் அபாராமான பேட்டிங்கால் 408 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய டீன் எல்கர் 287 பந்துகளில் 28 பவுண்டரி உள்பட 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவித்தது.
இதன் மூலமாக 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தான் கோட்டைவிட்டு விட்டோம், 2ஆவது இன்னிங்ஸிலாவது சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்ப்போம் என்று எந்த வீரரும் நினைக்கவில்லை. வந்த ஒவ்வொரு வீரரும் ஒற்றைப்படை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர்.
கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 6, கேஎல் ராகுல் 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷர்துல் தாக்கூர் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 0, முகமது சிராஜ் 4 என்று வரிசையாக நடையை கட்டினர்.
கடைசி வரை நிலையாக நின்ற விராட் கோலி அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி மட்டும் 76 ரன்கள் அடிக்கவில்லை என்றால், இந்திய அணி 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கும். கடைசி 6 விக்கெட்டிற்கு இந்திய அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 5 ஆவது விக்கெட்டிற்கு க்ளமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பின் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் வரையில் அனைவரும் சேர்ந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 2 இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்திய அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று எந்த பிளேயரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை வாரி கொடுத்தது தான் மிச்சம். எனினும், 2023 ஆம் ஆண்டை இந்திய அணி தோல்வியோடு முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலமாக 2023 ஆம் ஆண்டை தோல்வியோடு முடிந்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், அதனை இழக்காமல் இருப்பதற்கு 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கேப் டவுன் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – இங்கிலாந்து – பிர்மிங்காம் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – ஆஸ்திரேலியா – ஓவல் – 2023 – 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – செஞ்சூரியன் – 2023 – 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி