
India Lost Test Series after 12 Years: இங்கிலாந்திற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய 1-2 என்று 2012 ஆம் ஆண்டு இழந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி சரித்திரம் படைத்திருந்தது. ஆனால், 12 ஆண்டுகள், அதாவது 4331 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
தற்போது ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. புனேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற 2ஆவது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (77) வெற்றிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் ரவீந்திர ஜடேஜா (42) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் போராடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 17 ரன்கள் எடுத்தார். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் ரிஷப் பண்ட் (0) ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்கள் எடுத்தார். சர்ஃப்ராஸ் கான் 9 ரன்கள் எடுத்தார். ரவிச்சந்திரன் அஷ்வின் 18 ரன்கள் எடுத்தார். ஆகாஷ் தீப் 1 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்தின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய சான்ட்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 3 விக்கெட்டுகளை பிலிப்ஸ் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை அஜாஸ் வீழ்த்தினார். இந்திய அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
இந்தியாவுக்கு அவமான தோல்வி
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று நாட்களுக்குள் தோல்வியடைந்தது இந்திய அணிக்கு அவமானகரமானது. குறிப்பாக சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது குறித்து இந்திய அணி சிந்திக்க வேண்டும்…
பெங்களூரு டெஸ்ட் தோல்வி:
இதற்கு முன்னதாக பெங்களூருவில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை – வான்கடேயில் 3ஆவது டெஸ்ட்:
இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளிக்கு அடுத்த நாள் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பல மாற்றங்கள் செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்னதாக 15ஆம் தேதி இந்திய அணி வார்ம் அப் போட்டியில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.