
India vs New Zealand Test Series: புனே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் ரோகித் சர்மாவின் தவறான டாஸ் முடிவு காரணமாக இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும், மோசமான சாதனையும் படைத்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது. இதையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.
இதற்காக 24ஆம் தேதி புனே மைதானத்தில் தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களையும் செய்தது. இதில், கேஎல் ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். புனே மைதானத்தில் டாஸ் தான் முக்கிய பங்கு வகித்தது.
இதற்கு முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டியிலும் டாஸ் தான் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த அணியே 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டியிலும் வேகப்பந்தை விட சுழற்பந்து தான் கைகொடுத்திருக்கிறது.
அதன்படி டாஸ் ஜெயிச்ச நியூசிலாந்து பேட்டிங் செய்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் குவித்தது. இதில், டெவோன் கான்வே (76) மற்றும் ரச்சின் ரவீந்திரா (65) இருவரும் சிறப்பாக விளையாடினர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இதில், மிட்செல் சான்ட்னர் சுழலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சான்ட்னர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா (0), விராட் கோலி (1), சுப்மன் கில் (30), ரிஷப் பண்ட் (18) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் டாம் லாதம் 86 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். டாம் பிளண்டல் 41 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 48 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 2ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இறுதியாக 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இந்தியா ஒரு முறை மட்டுமே 300 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் நியூசிலாந்து பவுலிங் சிறப்பாக இருந்தது.
கடின இலக்கை துரத்திய இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் அதிரடியாக தொடங்கினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 23 ரன்களுக்கு நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட் 0 ரன்னில் ரன் அவுட்டானார். விராட் கோலியும் பெரிதாக அடிக்கவில்லை. அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களில் வெளியேறினார். ஒரு கட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தது.
ஆனாலும் அஸ்வின் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இந்திய அணியின் வெற்றிக்கான ரன் குறைந்து கொண்டே வந்தது. கையில் விக்கெட்டுகள் இருந்திருந்தால் இந்திய அணி ஜெயிச்சிருக்கும் என்று சொல்லும் நிலைக்கு வந்தது. விக்கெட் சரிவிலிருந்து மீண்ட ஆகாஷ் தீப் தவறான ஷாட் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டாக உள்ளே வந்த ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மிரள வைத்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா 42 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மடடுமே எடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி 12 ஆண்டுகளாக தக்க வைத்து வந்த 18 டெஸ்ட் தொடர் வெற்றி சாதனையை இந்த முறை இழந்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 0-2 என்று இழந்து 18 டெஸ்ட் தொடர் வெற்றிக்கு ஆப்பு வைத்து கொண்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காத இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்திடம் தோற்று இழந்தது. ஒரு கேப்டனாக ரோகித் சர்மா விளையாடிய 15 ஹோம் டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியை தழுவினார்.
இதற்கு முன்னதாக கபில் தேவ் மற்றும் முகமது அசாருதீன் ஒரு கேப்டனாக விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளனர். மன்சூர் அலி கான் பட்டோடி ஒரு கேப்டனாக விளையாடிய 27 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் தோல்வியை தழுவினார்.
12 முறை இந்தியா வந்து ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நியூசிலாந்து 13 ஆவது முறையாக 2-0 என்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் நியூசிலாந்து 69 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மவின் கேப்டன்ஸி மீது விமர்சனம் எழுந்துள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு முன்னதாக இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.