ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று (பிப்ரவரி 11) ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இரட்டை சூப்பர் ஓவர் வரை சென்றது. முதல் சூப்பர் ஓவரும் டை ஆனதால், முடிவை தீர்மானிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போட்டி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. குயின்டன் டி காக் (41 பந்தில் 59 ரன்கள்), ரியான் ரிக்கல்டன் (28 பந்தில் 61 ரன்) ஆகியோர் அரை சதம் அடித்தனர். இலக்கைத் துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, கடைசி ஓவரில் நடந்த பரபரப்பான ஆட்டத்தின் உதவியுடன் 187 ரன்கள் எடுத்து போட்டியை டை செய்தது. இதனால், முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறைக்கு செல்லப்பட்டது. ரஹ்மானுல்லா குர்பாஸ் தனி ஆளாக போராடி 42 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரியுடன் 84 ரன்கள் அடித்தார்.
முதல் சூப்பர் ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் அதிரடி
முதல் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய், லுங்கி இங்கிடி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்தை ஓமர்சாய் சிக்ஸருக்கு விளாசினார். மூன்றாவது பந்தில் ஓமர்சாய் ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் ஓமர்சாய் பவுண்டரி அடித்தார், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி பெற 18 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
முதல் சூப்பர் ஓவர் டை ஆனது
இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்கா, மில்லர் மற்றும் பிரெவிஸை களமிறக்கியது. பந்துவீசிய ஃபசல்ஹக் ஃபரூக்கி முதல் பந்தில் மில்லருக்கு ஒரு ரன் கொடுத்தார். அடுத்த பந்தில் பிரெவிஸ் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்தில் ஃபரூக்கி, பிரெவிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். நான்காவது பந்தில் ஸ்டப்ஸ் பவுண்டரி அடித்தார். ஐந்தாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஸ்டப்ஸ் சூப்பர் ஓவரை மீண்டும் டை ஆக்கினார்.
இரண்டாவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி
இரண்டாவது சூப்பர் ஓவரில் டேவிட் மில்லர் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஸ்டப்ஸ் அடித்த ஒரு சிக்ஸர் உதவியுடன் தென்னாப்பிரிக்கா 23 ரன்கள் குவித்தது. இது ஆப்கானிஸ்தானுக்கு கடினமான இலக்கை அளித்தது. இரண்டாவது சூப்பர் ஓவரை வீசும் பொறுப்பை ஏற்ற கேசவ் மஹாராஜ், முதல் பந்தில் நபிக்கு ரன் எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் நபியின் விக்கெட்டை வீழ்த்தினார்.
கடைசி வரை போராடிய குர்பாஸ்
பின்னர் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அடுத்ததாக கேசவ் மஹாராஜ் ஒரு வைடு பந்தை வீசினார். கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பவுண்டரி அடிக்கும் முயற்சியில் குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்ததால், ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது.